Tag: எட்டுத்தொகை

  • செய்குவம் கொல்லோ நல்வினை எனவே

    புறநானூறு

    செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
    ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
    நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே
    யானை வேட்டுவன் யானையும் பெறுமே
    குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
    அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
    செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
    செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்
    மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்
    மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
    கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
    தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே

    கோப்பெருஞ் சோழன்

  • அருவி தாழ்ந்த பெருவரை போல

    புறநானூறு

    அருவி தாழ்ந்த பெருவரை போல
    ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
    கடவுள் சான்ற கற்பின் சேயிழை
    மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
    கிண்கிணிப் புதல்வர் பொலிக என்று ஏத்தித்
    திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்
    காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்
    காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
    ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
    வேல்கெழு குருசில் கண்டேன் ஆதலின்
    விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த
    தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
    பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்
    நின்னோ ரன்னநின் புதல்வர் என்றும்
    ஒன்னார் வாட அருங்கலம் தந்து நும்
    பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
    முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்
    யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
    பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
    நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
    இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
    புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
    நீடு வாழிய நெடுந்தகை யானும்
    கேளில் சேஎய் நாட்டின் எந் நாளும்
    துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி நின்
    அடிநிழல் பழகிய வடியுறை
    கடுமான் மாற மறவா தீமே

    வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்

  • மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்

    புறநானூறு

    மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
    வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
    பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
    நின்தலை வந்த இருவரை நினைப்பின்
    தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்
    அமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்
    நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
    அனையை அல்லை அடுமான் தோன்றல்
    பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
    உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்
    ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே
    அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
    இன்னும் கேண்மதி இசைவெய் யோயே
    நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
    எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
    நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே
    அமர்வெஞ் செல்வ நீ அவர்க்கு உலையின்
    இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே
    அதனால்ஒழிகதில் அத்தைநின் மறனேவல்விரைந்து
    எழுமதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு
    ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
    செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
    அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
    விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே

    புல்லாற்றூர் எயிற்றியனார்

  • வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு

    புறநானூறு

    வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு
    கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
    கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
    மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
    உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
    செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
    மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
    வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே
    எம்மால் வியக்கப் படூஉ மோரே
    இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
    குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
    புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
    சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
    பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே
    மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
    உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்
    நல்லறி வுடையோர் நல்குரவு
    உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே

    கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • நுங்கோ யார் வினவின் எங்கோக்

    புறநானூறு

    நுங்கோ யார் வினவின் எங்கோக்
    களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
    யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா
    ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
    வைகுதொழின் மடியும் மடியா விழவின்
    யாணர் நல்நாட் டுள்ளும் பாணர்
    பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
    கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
    பொத்தில் நண்பின் பொத்தியடு கெழீஇ
    வாயார் பெருநகை வைகலும் நமக்கே

    பிசிராந்தையார்

  • ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

    புறநானூறு

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
    ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
    இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
    இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
    புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
    அனைத்தா கியர் இனி இதுவே எனைத்தும்
    சேய்த்துக் காணாது கண்டனம் அதனால்
    நோயிலர் ஆகநின் புதல்வர் யானும்
    வெயிலென முனியேன் பனியென மடியேன்
    கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
    நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
    மெல்லியல் குறுமகள் உள்ளிச்
    செல்வல் அத்தை சிறக்க நின் நாளே

    ஆவூர் மூலங்கிழார்

  • அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு

    புறநானூறு

    அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
    அணங்குடை அரவின் அருந்தலை துமிய
    நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்
    குன்றுதூவ எறியும் அரவம் போல
    முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
    அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல் நின்
    உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்
    வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் எனக்
    கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின்
    உள்ளியது முடிந்தோய் மன்ற முன்னாள்
    கையுள் ளதுபோல் காட்டி வழிநாள்
    பொய்யடு நின்ற புறநிலை வருத்தம்
    நாணாய் ஆயினும் நாணக் கூறி என்
    நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்
    பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்
    ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
    செல்வல் அத்தை யானே வைகலும்
    வல்சி இன்மையின் வயின்வயின் மாறி
    இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்
    பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து
    முலைக்கோள் மறந்த புதல்வனொடு
    மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே

    பெருங்குன்றூர் கிழார்

  • செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்

    புறநானூறு

    செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
    உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோ
    பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
    இரந்தன்று ஆகல் வேண்டும் பொலந்தார்
    மண்டமர் கடக்கும் தானைத்
    திண்தேர் வளவற் கொண்ட கூற்றே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய

    புறநானூறு

    தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய
    இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
    கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
    நிலமார் வையத்து வலமுறை வளைஇ
    வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையடு
    ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனிக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
    சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்
    இன்னிசைப் பறையடு வென்றி நுவலத்
    தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
    ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
    ஞாலங் காவலர் கடைத்தலைக்
    காலைத் தோன்றினும் நோகோ யானே

    ஆலத்தூர் கிழார்

  • அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்

    புறநானூறு

    அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்
    துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
    இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
    அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து
    முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
    பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
    பருதி உருவின் பல்படைப் புரிசை
    எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
    வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்
    அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்
    இறந்தோன் தானே அளித்துஇவ் வுலகம்
    அருவி மாறி அஞ்சுவரக் கருகிப்
    பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்
    பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
    பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
    கொய்துகட்டு அழித்த வேங்கையின்
    மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே

    கருங்குழல் ஆதனார்