Tag: எட்டுத்தொகை

  • படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

    புறநானூறு

    படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே

    பாண்டியன் அறிவுடை நம்பி

  • நாடா கொன்றோ காடா கொன்றோ

    புறநானூறு

    நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே

    ஔவையார்

  • நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

    புறநானூறு

    நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
    மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
    அதனால் யான்உயிர் என்பது அறிகை
    வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே

    மோசிகீரனார்

  • கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்

    புறநானூறு

    கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
    காவற் சாகாடு உகைப்போன் மாணின்
    ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே
    உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
    பகைக்கூழ் அள்ளற் பட்டு
    மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே

    தொண்டைமான் இளந்திரையன்

  • காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

    புறநானூறு

    காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
    மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்
    நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
    வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
    அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
    கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
    மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
    யானை புக்க புலம்போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே

    பிசிராந்தையார்

  • உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

    புறநானூறு

    உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
    தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
    துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
    புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
    அன்ன மாட்சி அனைய ராகித்
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

    கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

  • மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்

    புறநானூறு

    மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
    கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
    கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
    பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
    புலாஅல் அம்பின் போர்அருங் கடிமிளை
    வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
    உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
    இன்னே சென்மதி நீயே சென்று அவன்
    பகைப்புலம் படரா அளவை நின்
    பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே

    சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்

  • நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே

    புறநானூறு

    நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
    இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே
    இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
    இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து
    மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
    வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
    ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
    இன்மை தீர வேண்டின் எம்மொடு
    நீயும் வம்மோ முதுவாய் இரவல
    யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
    உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்
    கருங்கைக் கொல்லனை இரக்கும்
    திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே

    கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • செய்குவம் கொல்லோ நல்வினை எனவே

    புறநானூறு

    செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
    ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
    நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே
    யானை வேட்டுவன் யானையும் பெறுமே
    குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
    அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
    செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
    செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்
    மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்
    மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
    கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
    தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே

    கோப்பெருஞ் சோழன்

  • அருவி தாழ்ந்த பெருவரை போல

    புறநானூறு

    அருவி தாழ்ந்த பெருவரை போல
    ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
    கடவுள் சான்ற கற்பின் சேயிழை
    மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
    கிண்கிணிப் புதல்வர் பொலிக என்று ஏத்தித்
    திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்
    காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்
    காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
    ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
    வேல்கெழு குருசில் கண்டேன் ஆதலின்
    விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த
    தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
    பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்
    நின்னோ ரன்னநின் புதல்வர் என்றும்
    ஒன்னார் வாட அருங்கலம் தந்து நும்
    பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
    முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்
    யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
    பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
    நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
    இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
    புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
    நீடு வாழிய நெடுந்தகை யானும்
    கேளில் சேஎய் நாட்டின் எந் நாளும்
    துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி நின்
    அடிநிழல் பழகிய வடியுறை
    கடுமான் மாற மறவா தீமே

    வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்