Tag: எட்டுத்தொகை

  • நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு

    புறநானூறு

    நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு
    ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
    பெருமலை யன்ன தோன்றுதல் சூன்முதிர்பு
    உரும்உரறு கருவியடு பெயல்கடன் இறுத்து
    வள்மலை மாறிய என்றூழ்க் காலை
    மன்பதை யெல்லாம் சென்றுணர் கங்கைக்
    கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
    எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்
    அன்பில் ஆடவர் கொன்று ஆறு கவரச்
    சென்று தலைவருந அல்ல அன்பின்று
    வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு
    இற்றை நாளடும் யாண்டுதலைப் பெயர் எனக்
    கண் பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து
    அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்
    தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்
    பனைமருள் தடக்கை யடு முத்துப்படு முற்றிய
    உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு
    ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்
    படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
    செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்
    இன்மை துரப்ப இசைதர வந்து நின்
    வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி
    வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
    என்அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
    நின் அளந்து அறிமதி பெரும என்றும்
    வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்தருந்திப்
    பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
    மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல
    நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
    தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப
    வாள் அமர் உயர்ந்தநின் தானையும்
    சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே

    பெருஞ்சித்திரனார்

  • கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன

    புறநானூறு

    கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
    பாறிய சிதாரேன் பலவுமுதல் பொருந்தித்
    தன்னும் உள்ளேன் பிறிதுபுலம் படர்ந்த என்
    உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி
    மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்
    வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்
    செல்வத் தோன்றல் ஓர் வல்வில் வேட்டுவன்
    தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ
    இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை
    கான்அதர் மயங்கிய இளையர் வல்லே
    தாம்வந்து எய்தா அளவை ஒய்யெனத்
    தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின்
    இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்
    அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி
    நல்மரன் நளிய நறுந்தண் சாரல்
    கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
    விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே
    பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
    பிறிதொன்று இல்லை காட்டு நாட்டோம் என
    மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
    மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்
    எந்நா டோ என நாடும் சொல்லான்
    யாரீ ரோ எனப் பேரும் சொல்லான்
    பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே
    இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
    அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
    பளிங்கு வகுத் தன்ன தீநீர்
    நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே

    வன் பரணர்

  • நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

    புறநானூறு

    நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
    மாலை மருதம் பண்ணிக் காலைக்
    கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
    வரவுஎமர் மறந்தனர் அது நீ
    புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

    வன்பரணர்

  • கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி நின்

    புறநானூறு

    கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி நின்
    அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி
    நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து
    கூடுவிளங்கு வியன்நகர்ப் பரிசில் முற்று அளிப்பப்
    பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
    செய்யா கூறிக் கிளத்தல்
    எய்யா தாகின்று எம் சிறு செந்நாவே

    வன்பரணர்

  • கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்

    புறநானூறு

    கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
    சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
    கார்வான் இன்னுறை தமியள் கேளா
    நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
    அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
    நெய்யடு துறந்த மையிருங் கூந்தல்
    மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப்
    புதுமலர் கஞல இன்று பெயரின்
    அதுமன் எம் பரிசில் ஆவியர் கோவே

    பெருங்குன்றூர் கிழார்

  • அன்ன வாக நின் அருங்கல வெறுக்கை

    புறநானூறு

    அன்ன வாக நின் அருங்கல வெறுக்கை
    அவை பெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக
    சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல
    நன்னாடு பாட என்னை நயந்து
    பரிசில் நல்குவை யாயின் குரிசில் நீ
    நல்கா மையின் நைவரச் சாஅய்
    அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
    கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
    ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
    தண்கமழ் கோதை புனைய
    வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே

    அரிசில் கிழார்

  • ஏற்றுக உலையே ஆக்குக சோறே

    புறநானூறு

    ஏற்றுக உலையே ஆக்குக சோறே
    கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள்ளிழைப்
    பாடுவல் விறலியர் கோதையும் புனைக
    அன்னவை பலவும் செய்க என்னதூஉம்
    பரியல் வெண்டா வருபதம் நாடி
    ஐவனங் காவல் பெய்தீ நந்தின்
    ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
    வன்புல நாடன் வயமான் பிட்டன்
    ஆரமர் கடக்கும் வேலும் அவனிறை
    மாவள் ஈகைக் கோதையும்
    மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே

    வடமண்ணக்கன் தாமோதரனார்

  • மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்

    புறநானூறு

    மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
    படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
    கடாஅ யானைக் கலிமான் பேக
    பசித்தும் வாரோம் பாரமும் இலமே
    களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
    நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
    அறம்செய் தீமோ அருள்வெய் யோய் என
    இ·தியாம் இரந்த பரிசில் அஃது இருளின்
    இனமணி நெடுந்தேர் ஏறி
    இன்னாது உறைவி அரும்படர் களைமே

    கபிலர்

  • அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்

    புறநானூறு

    அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
    கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
    கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையடு
    கடுங்கண் கேழல் உழுத பூழி
    நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
    உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
    முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
    மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
    மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
    வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
    சாந்த விறகின் உவித்த புன்கம்
    கூதளங் கவினிய குளவி முன்றில்
    செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
    ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல்
    நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
    வடிநவில் அம்பின் வில்லோர் பெரும
    கைவள் ஈகைக் கடுமான் கொற்ற
    வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
    பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
    பாடுப என்ப பரிசிலர் நாளும்
    ஈயா மன்னர் நாண
    வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே

    கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்

  • அருளா யாகலோ கொடிதே இருள்வரச்

    புறநானூறு

    அருளா யாகலோ கொடிதே இருள்வரச்
    சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
    கார்எதிர் கானம் பாடினே மாக
    நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
    கலுழ்ந்து வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப
    இனைதல் ஆனா ளாக இளையோய்
    கிளையை மன் எம் கேள்வெய் யோற்குஎன
    யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
    முகைபுரை விரலின் கண்ணீர் துடையா
    யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள்இனி
    எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
    வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன்
    ஒல்லென ஒலிக்கும் தேரொடு
    முல்லை வேலி நல்லூ ரானே

    கபிலர்