புறநானூறு
அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன
மெய்களைந்து இன்னொடு விரைஇ
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
அழிகளிற் படுநர் களியட வைகின்
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன்தொல்லோர் மருகன்
இசையிற் கொண்டான் நசையமுது உண்க என
மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தை யான் வேண்டிவந் தது என
ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியடு நல்கி யோனே சீர்கொள
இழுமென இழிதரும் அருவி
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே
ஐயூற் முடவனார்