Author: Pulan

  • யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை

    புறநானூறு

    யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை
    அவனே பெறுக என் நாஇசை நுவறல்
    நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
    பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
    அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
    நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
    வில்லி யாதன் கிணையேம் பெரும
    குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்
    நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
    வல்லன் எந்தை பசிதீர்த்தல் எனக்
    கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
    கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
    விண்தோய் தலைய குன்றம் பிற்பட
    ____________________ரவந்தனென் யானே
    தாயில் தூவாக் குழவிபோல ஆங்கு அத்
    திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
    வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
    குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே

    புறத்திணை நன்னாகனார்

  • தென் பரதவர் மிடல் சாய

    புறநானூறு

    தென் பரதவர் மிடல் சாய
    வட வடுகர் வாள் ஓட்டிய
    தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
    கடுமா கடை இய விடுபரி வடிம்பின்
    நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
    புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
    பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்
    அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
    எஞ்சா மரபின் வஞ்சி பாட
    எமக்கென வகுத்த அல்ல மிகப்பல
    மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
    தாங்காது பொழிதந் தோனே அது கண்டு
    இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
    அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு
    அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
    இருங்குளைத் தலைமை எய்தி
    அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • பனி பழுநிய பல் யாமத்துப்

    புறநானூறு

    பனி பழுநிய பல் யாமத்துப்
    பாறு தலை மயிர் நனைய
    இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
    இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி
    அவி உணவினோர் புறங் காப்ப
    அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
    அதற் கொண்டு வரல் ஏத்திக்
    கரவு இல்லாக் கவிவண் கையான்
    வாழ்க எனப் பெயர் பெற்றோர்
    பிறர்க்கு உவமம் பிறர் இல் என
    அது நினைத்து மதி மழுகி
    அங்கு நின்ற எற் காணூஉச்
    சேய் நாட்டுச் செல் கிணைஞனை
    நீபுரவலை எமக்கு என்ன
    மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
    கடல் பயந்த கதிர் முத்தமும்
    வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
    கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
    நனவின் நல்கியோன் நகைசால் தோன்றல்
    நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
    வேந்தென மொழிவோர் அவன் வேந்தென மொழிவோர்
    __________ பொற்கோட்டு யானையர்
    கவர் பரிக் கச்சை நன்மான்
    வடி மணி வாங்கு உருள
    __________ நல்தேர்க் குழுவினர்
    கத ழிசை வன்க ணினர்
    வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
    கடல் ஒலி கொண்ட தானை
    அடல்வெங் குருசில் மன்னிய நெடிதே

    உலோச்சனார்

  • விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

    புறநானூறு

    விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
    பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
    சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்
    சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்
    பாணர் ஆரும் அளவை யான்தன்
    யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்
    இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
    குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்
    பண்டுஅறி வாரா உருவோடு என் அரைத்
    தொன்றுபடு துளையடு பருஇழை போகி
    நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி
    விருந்தினன் அளியன் இவன் எனப் பெருந்தகை
    நின்ற முரற்கை நீக்கி நன்றும்
    அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
    நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே
    இரவி னானே ஈத்தோன் எந்தை
    அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
    இரப்பச் சிந்தியேன் நிரப்படு புணையின்
    உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
    நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
    ஒருநாள் இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
    ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
    தோன்றல் செல்லாது என் சிறுகிணைக் குரலே

    புறத்திணை நன்னாகனார்

  • அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி

    புறநானூறு

    அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
    நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
    பொதியில் ஒருசிறை பள்ளி யாக
    முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
    நாரும் போழும் கிணையோடு சுருக்கி
    ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
    ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
    புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் எனப்
    புரசம் தூங்கும் அறாஅ யாணர்
    வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந
    பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்
    யாவரும் இன்மையின் கிணைப்பத் தாவது
    பெருமழை கடல்பரந் தாஅங்கு யானும்
    ஒருநின் உள்ளி வந்தனென் அதனால்
    புலவர் புக்கில் ஆகி நிலவரை
    நிலீ இயர் அத்தை நீயே ஒன்றே
    நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து
    நிலவன் மாரோ புரவலர் துன்னிப்
    பெரிய ஓதினும் சிறிய உணராப்
    பீடின்று பெருகிய திருவின்
    பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்

    புறநானூறு

    கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்
    புல்வாய் இரலை நெற்றி யன்ன
    பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
    தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
    மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி என்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    இருங்கலை ஓர்ப்ப இசைஇக் காண்வரக்
    கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்
    புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்
    மான்கண் மகளிர் கான்தேர் அகன்று உவா
    சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
    விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
    புகர்முக வேழத்து முருப்பொடு மூன்றும்
    இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ
    விரிந்து இறை நல்கும் நாடன் எங்கோன்
    கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
    வண்மையும் உடையையோ ஞாயிறு
    கொன்விளங் குதியால் விசும்பி னானே

    உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்

  • ஒன்றுநன் குடைய பிறர் குன்றம் என்றும்

    புறநானூறு

    ஒன்றுநன் குடைய பிறர் குன்றம் என்றும்
    இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்
    நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
    தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அதான்று
    நிறையருந் தானை வேந்தரைத்
    திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே

    மோசிகீரனார்

  • பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப

    புறநானூறு

    பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
    விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
    கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
    புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
    பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
    கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்
    முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
    நன்னன் மருகன் அன்றியும் நீயும்
    முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்கு மொழிப்
    பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை
    அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
    மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே

    பெருந்தலைச் சாத்தனார்

  • சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி

    புறநானூறு

    சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி
    தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
    வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
    பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
    கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட
    மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
    நீரினும் இனிய சாயல்
    பாரி வேள்பால் பாடினை செலினே

    கபிலர்

  • மாசு விசும்பின் வெண் திங்கள்

    புறநானூறு

    மாசு விசும்பின் வெண் திங்கள்
    மூ வைந்தான் முறை முற்றக்
    கடல் நடுவண் கண்டன்ன என்
    இயம் இசையா மரபு ஏத்திக்
    கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
    பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
    உலகு காக்கும் உயர் கொள்கை
    கேட்டோன் எந்தை என் தெண்கிணைக் குரலே
    கேட்டற் கொண்டும் வேட்கை தண்டாது
    தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
    மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
    _____________________________லவான
    கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி
    நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து
    போ தறியேன் பதிப் பழகவும்
    தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
    பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
    மறவர் மலிந்ததன் ________________
    கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
    இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
    தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்
    துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
    உறைவின் யாணர் நாடுகிழ வோனே

    கோவூர் கிழார்