Author: Pulan

  • எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

    புறநானூறு

    எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
    அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
    யாண்டுளனோவென வினவுதி ஆயின்
    வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
    அருங்கடன் இறுமார் வயவர் எறிய
    உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
    மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
    அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
    பலகை அல்லது களத்துஒழி யதே
    சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
    நாநவில் புலவர் வாய் உளானே

    பெருங்கடுங்கோ

  • தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ

    புறநானூறு

    தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
    வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்
    கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
    ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
    இசைமணி எறிந்து காஞ்சி பாடி
    நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
    காக்கம் வம்மோ காதலந் தோழீ
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

    அரிசில் கிழார்

  • என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

    புறநானூறு

    என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
    நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
    நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா
    துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
    அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்
    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா
    துடிய பாண பாடுவல் விறலி
    என்ஆ குவிர்கொல் அளியிர் நுமக்கும்
    இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
    தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
    சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
    கழிகல மகளிர் போல
    வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

    புறநானூறு

    கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
    மூதின் மகளிர் ஆதல் தகுமே
    மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
    யானை எறிந்து களத்துஒழிந் தன்னே
    நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
    பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
    இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
    வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
    ஒருமகன் அல்லது இல்லோள்
    செருமுக நோக்கிச் செல்க என விடுமே

    ஒக்கூர் மாசாத்தியார்

  • நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

    புறநானூறு

    நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
    முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
    மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
    முலைஅறுத் திடுவென் யான் எனச் சினைஇக்
    கொண்ட வாளடு படுபிணம் பெயராச்
    செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ
    ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

    காக்கைபாடினியார்

  • மீன்உண் கொக்கின் தூவி அன்ன

    புறநானூறு

    மீன்உண் கொக்கின் தூவி அன்ன
    வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
    களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
    ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
    நோன்கழை துயல்வரும் வெதிரத்து
    வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே

    பூங்கணுத்திரையார்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

    புறநானூறு

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
    கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
    நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
    கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

    பொன் முடியார்

  • எமக்கே கலங்கல் தருமே தானே

    புறநானூறு

    எமக்கே கலங்கல் தருமே தானே
    தேறல் உண்ணும் மன்னே நன்றும்
    இன்னான் மன்ற வேந்தே இனியே
    நேரார் ஆரெயில் முற்றி
    வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே