புறநானூறு
வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை கசிபு கைதொழாஅக்
காணலென் கொல் என வினவினை வரூஉம்
பாண கேண்மதி யாணரது நிலையே
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்
கையுள போலும் கடிதுஅண் மையவே
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக
வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையடு வந்த உரைய னாகி
உரிகளை அரவ மானத் தானே
அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே
வடமோதங்கிழார்