Author: Pulan

  • ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை

    புறநானூறு

    ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
    ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
    போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
    பல்ஆன் கோவலர் படலை சூட்டக்
    கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்
    வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
    பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
    கடும்பகட்டு யானை வேந்தர்
    ஒடுங்க வென்றியும் நின்னொடு செலவே

    சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

  • பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி

    புறநானூறு

    பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
    மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு
    அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
    இனிநட் டனரே கல்லும் கன்றொடு
    கறவை தந்து பகைவர் ஓட்டிய
    நெடுந்தகை கழிந்தமை அறியாது
    இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே

    உறையூர் இளம்பொன் வாணிகனார்

  • பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்

    புறநானூறு

    பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
    இரும்பறை இரவல சேறி ஆயின்
    தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
    வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யாறே
    பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
    கல்லா இளையர் நீங்க நீங்கான்
    வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
    கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே

  • நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்

    புறநானூறு

    நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்
    பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
    புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்
    ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
    நிரையோடு வரூஉம் என்னைக்கு
    உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே

    மதுரைப் பேராலவாயர்

  • அந்தோ எந்தை அடையாப் பேரில்

    புறநானூறு

    அந்தோ எந்தை அடையாப் பேரில்
    வண்டுபடு நறவின் தண்டா மண்டையடு
    வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
    வெற்றுயாற்று அம்பியின் எற்று அற்று ஆகக்
    கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே
    வையங் காவலர் வளம்கெழு திருநகர்
    மையல் யானை அயாவுயிர்த் தன்ன
    நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
    புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
    பயந்தனை மன்னால் முன்னே இனியே
    பல்ஆ தழீஇய கல்லா வல்வில்
    உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
    நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
    விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட
    நிரைஇவண் தந்து நடுகல் ஆகிய
    வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
    கொய்ம்மழித் தலையடு கைம்மையுறக் கலங்கிய
    கழிகலம் மகடூஉப் போல
    புல்என் றனையால் பல்அணி இழந்தே

    ஆவூர் மூலங்கிழார்

  • வளரத் தொடினும் வெளவுபு திரிந்து

    புறநானூறு

    வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
    விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
    தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
    உளரும் கூந்தல் நோக்கி களர
    கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
    பசிபடு மருங்குலை கசிபு கைதொழாஅக்
    காணலென் கொல் என வினவினை வரூஉம்
    பாண கேண்மதி யாணரது நிலையே
    புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
    எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்
    கையுள போலும் கடிதுஅண் மையவே
    முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
    நெடுநிரை தழீஇய மீளி யாளர்
    விடுகணை நீத்தம் துடிபுணை யாக
    வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
    வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
    வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
    கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
    நிரையடு வந்த உரைய னாகி
    உரிகளை அரவ மானத் தானே
    அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
    கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
    கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
    அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே
    உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
    மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
    இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
    படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே

    வடமோதங்கிழார்

  • ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

    புறநானூறு

    ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
    இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
    வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்
    செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
    முதுகுமெய்ப் புலைத்தி போலத்
    தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
    புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

    பெரும்பூதனார்

  • முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

    புறநானூறு

    முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
    தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
    நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
    பச்சூன் தின்று பைந்நிணப் பெருத்த
    எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்
    புலம்புக் கனனே புல்அணற் காளை
    ஒருமுறை உண்ணா அளவைப் பெருநிரை
    ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் யார்க்கும்
    தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி
    ஆதரக் கழுமிய துகளன்
    காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே

    உலோச்சனார்

  • செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

    புறநானூறு

    செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
    அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
    குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
    செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
    யார்கொலோ அளியன் தானே தேரின்
    ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரண்எனக்
    காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
    புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
    கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
    சிலையின் மாற்றி யோனே அவைதாம்
    மிகப்பல ஆயினும் என்னாம்-எனைத்தும்
    வெண்கோள் தோன்றாக் குழிசியடு
    நாள்உறை மத்தொலி கேளா தோனே

  • கலம்செய் கோவே கலம்செய் கோவே

    புறநானூறு

    கலம்செய் கோவே கலம்செய் கோவே
    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே