Author: Pulan

  • பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

    புறநானூறு

    பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே
    ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே
    அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே
    திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே
    மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
    துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
    அனையன் என்னாது அத்தக் கோனை
    நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று
    பைதல் ஒக்கல் தழீஇ அதனை
    வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
    நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
    கெடுவில் நல்லிசை சூடி
    நடுகல் ஆயினன் புரவலன் எனவே

    பொத்தியார்

  • பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த

    புறநானூறு

    பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
    பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
    அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
    வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
    கலங்கினேன் அல்லனோ யானே-பொலந்தார்த்
    தேர்வண் கிள்ளி போகிய
    பேரிசை மூதூர் மன்றங் கண்டே

    பொத்தியார்

  • உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்

    புறநானூறு

    உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
    முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
    புலவுதி மாதோ நீயே
    பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே

    பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்

  • பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

    புறநானூறு

    பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
    அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
    ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
    சான்றோர் பாலர் ஆப
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே

    கண்ணகனார் நத்தத்தனார்

  • நினைக்கும் காலை மருட்கை உடைத்தே

    புறநானூறு

    நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
    எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
    அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
    தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
    இசைமரபு ஆக நட்புக் கந்தாக
    இனையதோர் காலை ஈங்கு வருதல்
    வருவன் என்ற கோனது பெருமையும்
    அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
    அதனால் தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
    சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
    அன்னோனை இழந்தஇவ் வுலகம்
    என்னா வதுகொல் அளியது தானே

    பொத்தியார்

  • கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்

    புறநானூறு

    கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
    காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
    வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
    அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று
    ஐயம் கொள்ளன்மின் ஆரறி வாளிர்
    இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
    புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
    புன்பெயர் கிளக்கும் காலை என் பெயர்
    பேதைச் சோழன் என்னும் சிறந்த
    காதற் கிழமையும் உடையவன் அதன் தலை
    இன்னதோர் காலை நில்லலன்
    இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே

    கோப்பெருஞ் சோழன்

  • கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்

    புறநானூறு

    கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
    தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
    வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ
    ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
    அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
    தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
    பிசிரோன் என்ப என் உயிர்ஓம் புநனே
    செல்வக் காலை நிற்பினும்
    அல்லற் காலை நில்லலன் மன்னே

    கோப்பெருஞ் சோழன்

  • கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

    புறநானூறு

    கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
    செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
    வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடுமுன் னினனே கட்கா முறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென் றனவே
    தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே
    ஆள்இல் வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே
    வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
    எந்தை ஆகுல அதற்படல் அறியேன்
    அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
    என்ஆ குவர்கொல் என் துன்னி யோரே
    மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
    ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
    கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
    வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
    அவல மறுசுழி மறுகலின்
    தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

    பெருஞ்சித்திரனார்

  • நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்

    புறநானூறு

    நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்
    பாடி நின்ற பசிநாட் கண்ணே
    கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
    பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
    வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
    நச்சி இருந்த நசைபழுது ஆக
    அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
    அளியர் தாமே ஆர்க என்னா
    அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
    ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
    வாழைப் பூவின் வளைமுறி சிதற
    முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
    ஆங்கு அது நோயின்று ஆக ஓங்குவரைப்
    புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
    எலிபார்த்து ஒற்றாது ஆகும் மலி திரைக்
    கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
    நனியுடைப் பரிசில் தருகம்
    எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே

    பெருஞ்சித்திரனார்

  • கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

    புறநானூறு

    கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
    சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
    மலை கெழு நாட மா வண் பாரி
    கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
    புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
    பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
    ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி
    இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
    மேயினேன் அன்மை யானே ஆயினும்
    இம்மை போலக் காட்டி உம்மை
    இடையில் காட்சி நின்னோடு
    உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

    கபிலர்