Author: Pulan

  • நுங்கோ யார் வினவின் எங்கோக்

    புறநானூறு

    நுங்கோ யார் வினவின் எங்கோக்
    களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
    யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா
    ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ
    வைகுதொழின் மடியும் மடியா விழவின்
    யாணர் நல்நாட் டுள்ளும் பாணர்
    பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
    கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
    பொத்தில் நண்பின் பொத்தியடு கெழீஇ
    வாயார் பெருநகை வைகலும் நமக்கே

    பிசிராந்தையார்

  • மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது

    புறநானூறு

    மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது
    அன்புகண் மாறிய அறனில் காட்சியடு
    நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்
    எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
    செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி
    உயிர்சிறிது உடையள் ஆயின் எம்வயின்
    உள்ளாது இருத்தலோ அரிதே அதனால்
    அறனில் கூற்றம் திறனின்று துணியப்
    பிறனா யினன்கொல் இறீஇயர் என் உயிர்` என
    நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்
    இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை
    விடுத்தேன் வாழியர் குருசில் உதுக்காண்
    அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர்
    அருங்கடி முனையரண் போலப்
    பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே

    பெருங்குன்றூர் கிழார்

  • பொய்கை நாரை போர்வில் சேக்கும்

    புறநானூறு

    பொய்கை நாரை போர்வில் சேக்கும்
    நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
    கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்
    அகல் அடை அரியல் மாந்திக் தெண்கடல்
    படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
    மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
    பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகத்து
    பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
    பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
    பெறாது பெயரும் புள்ளினம் போல நின்
    நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலென்
    வறுவியேன் பெயர்கோ வாள்மேம் படுந
    ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
    நோயிலை ஆகுமதி பெரும நம்முள்
    குறுநணி காண்குவ தாக நாளும்
    நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
    தெரியிழை அன்ன மார்பின்
    செருவெம் சேஎய் நின் மகிழ்இரு க்கையே

    பெருந்தலைச் சாத்தனார்

  • குன்றும் மலையும் பலபின் ஒழிய

    புறநானூறு

    குன்றும் மலையும் பலபின் ஒழிய
    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
    நின்ற என்நயந்து அருளி ஈது கொண்டு
    ஈங்கனம் செல்க தான் என என்னை
    யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்
    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
    தினை அனைத்து ஆயினும் இனிதுஅவர்
    துணை அளவு அறிந்து நல்கினர் விடினே

    பெருஞ்சித்திரனார்

  • எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ

    புறநானூறு

    எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ
    பருகு அன்ன வேட்கை இல்அழி
    அருகிற் கண்டும் அறியார் போல
    அகம்நக வாரா முகன்அழி பரிசில்
    தாள்இலாளர் வேளார் அல்லர்
    வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
    பெரிதே உலகம் பேணுநர் பலரே
    மீளி முன்பின் ஆளி போல
    உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
    நோவா தோன்வயின் திரங்கி
    வாயா வன்கனிக்கு உலமரு வோரே

    பெருஞ்சித்திரனார்

  • வாயி லோயே வாயி லோயே

    புறநானூறு

    வாயி லோயே வாயி லோயே
    வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
    உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
    வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
    பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
    கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
    தன்அறி யலன்கோல் என்னறி யலன்கொல்
    அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென
    வறுந்தலை உலகமும் அன்றே அதனால்
    காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
    மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
    மழுவுடைக் காட்டகத்து அற்றே
    எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

    ஔவையார்

  • முற்றிய திருவின் மூவர் ஆயினும்

    புறநானூறு

    முற்றிய திருவின் மூவர் ஆயினும்
    பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே
    விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
    உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
    தாளுளம் தபுத்த வாள்மிகு தானை
    வெள்வீ வேலிக் கோடைப் பொருந
    சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
    மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
    நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக
    ஆர்கலி யாணர்த் தரீஇய கால் வீழ்த்துக்
    கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
    நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
    ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
    களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே

    பெருந்தலைச் சாத்தனார்

  • ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்

    புறநானூறு

    ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
    கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
    தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே
    ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
    சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
    உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
    புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளிச் சென்றோர் பழியலர் அதனாற்
    புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
    கருவி வானம் போல
    வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

    கழைதின் யானையார்

  • பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்

    புறநானூறு

    பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
    கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
    செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
    மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
    கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
    நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்
    களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
    விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக் கோவே
    இவரே பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
    நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
    கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த
    பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்
    யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
    வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
    நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
    அடங்கா மன்னரை அடக்கும்
    மடங்கா விளையுள் நாடு கிழவோயே

    கபிலர்

  • கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

    புறநானூறு

    கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
    நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
    செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்
    அனையர் வாழியோ இரவலர் அவரைப்
    புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
    உடைமை ஆகும் அவர் உடைமை
    அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

    பெரும்பதுமனார்