Author: Pulan

  • சுவல் அழுந்தப் பல காய

    புறநானூறு

    சுவல் அழுந்தப் பல காய
    சில் லோதிப் பல்இளை ஞருமே
    அடி வருந்த நெடிது ஏறிய
    கொடி மருங்குல் விறலிய ருமே
    வாழ்தல் வேண்டிப்
    பொய் கூறேன் மெய் கூறுவல்
    ஓடாப் பூட்கை உரவோர் மருக
    உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
    மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்
    கனிபதம் பார்க்கும் காலை யன்றே
    ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
    சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
    இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
    அருஞ் சமம் வருகுவ தாயின்
    வருந்தலு முண்டு என் பைதலங் கடும்பே

    மருதன் இளநாகனார்

  • ஆனினம் கலித்த அதர்பல கடந்து

    புறநானூறு

    ஆனினம் கலித்த அதர்பல கடந்து
    மானினம் கலித்த மலையின் ஒழிய
    மீளினம் கலித்த துறைபல நீந்தி
    உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
    சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண
    நீயே பேரெண் ணலையே நின்இறை
    ’மாறி வா’ என மொழியலன் மாதோ
    ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
    கிளி மரீஇய வியன் புனத்து
    மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
    நின்னை வருதல் அறிந்தனர் யாரே

    மருதன் இளநாகனார்

  • யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

    புறநானூறு

    யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
    இழை வலந்த பஃறுன்னத்து
    இடைப் புரைபற்றிப் பிணி விடாஅ
    ஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்த
    பேஎன் பகையென ஒன்று என்கோ
    உண்ணா மையின் ஊன் வாடித்
    தெண் ணீரின் கண் மல்கிக்
    கசிவுற்ற என் பல் கிளையடு
    பசி அலைக்கும் பகைஒன் றென்கோ
    அன்ன தன்மையும் அறிந்து ஈயார்
    நின்னது தா என நிலை தளர
    மரம் பிறங்கிய நளிச் சிலம்பின்
    குரங் கன்ன புன்குறுங் கூளியர்
    பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ
    ஆஅங்கு எனைப் பகையும் அறியுநன் ஆய்
    எனக் கருதிப் பெயர் ஏத்தி
    வா யாரநின் இசை நம்பிச்
    சுடர் சுட்ட சுரத்து ஏறி
    இவண் வந்த பெரு நசையேம்
    எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்
    பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென
    அனைத் துரைத்தனன் யான்ஆக
    நினக்கு ஒத்தது நீ நாடி
    நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
    தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
    நுண்பல மணலினும் ஏத்தி
    உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

    துறையூர் ஓடை கிழார்

  • கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை

    புறநானூறு

    கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
    அருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
    தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
    வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
    பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
    வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
    படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
    ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
    புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
    வந்தெனன் எந்தை யானே யென்றும்
    மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
    கறையடி யானை இரியல் போக்கும்
    மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்
    களிறும் அன்றே மாவும் அன்றே
    ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே
    பாணர் படுநர்பரிசிலர் ஆங்கவர்
    தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப்
    பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
    அன்ன வாக நின் ஊழி நின்னைக்
    காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
    உறுமுரண் கடந்த ஆற்றல்
    பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

    புறநானூறு

    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
    அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்
    பிறரும் சான்றோர் சென்ற நெறியென
    ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே

    புறநானூறு

    முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
    ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
    பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க என் செவியே
    நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
    குவளைப் பைஞ்சுனை பருகி அயல
    தகரத் தண்ணிழல் பிணையடு வதியும்
    வடதிசை யதுவே வான்தோய் இமையம்
    தென்திசை ஆஅய் குடி இன்றாயின்
    பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்

    புறநானூறு

    மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்
    வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
    குன்றம் பாடின கொல்லோ
    களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு

    புறநானூறு

    விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு
    இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ
    நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
    இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
    அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
    குடகடல் ஓட்டிய ஞான்றைத்
    தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

    புறநானூறு

    குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
    வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
    வேங்கை முன்றில் குரவை அயரும்
    தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்
    ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்
    இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
    வானம் மீன்பல பூப்பின் ஆனாது
    ஒருவழிக் கருவழி யின்றிப்
    பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன

    புறநானூறு

    பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
    நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
    பரூஉக் கண் மண்டை யடு ஊழ்மாறு பெயர
    உண்கும் எந்தை நிற் காண்குவந் திசினே
    நள் ளாதார் மிடல் சாய்ந்த
    வல்லாள நின் மகிழிருக் கையே
    உழுத நோன் பகடு அழிதின் றாங்கு
    நல்லமிழ்து ஆக நீ நயந்துண்ணும் நறவே
    குன்றத் தன்ன களிறு பெயரக்
    கடந்தட்டு வென்றோனும் நிற் கூறும்மே
    ‘வெலீஇயோன் இவன்’ எனக்
    ‘கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு
    விரைந்து வந்து சமந் தாங்கிய
    வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
    நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கு’ எனத்
    தோற்றோன் தானும் நிற்கூ றும்மே
    ‘தொலைஇயோன் அவன்’ என
    ஒருநீ ஆயினை பெரும பெரு மழைக்கு
    இருக்கை சான்ற உயர் மலைத்
    திருத்தகு சேஎய் நிற் பெற்றிசி னோர்க்கே

    வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்